ஜலந்தர் பகுதியில் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜலந்தர் நகரம். இமாசல பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள இந்த நகரில் இருந்து சுமார் 213 கி.மீ. தொலைவில் இமயமலையின் தவுலதார் மலைத்தொடர் இருக்கிறது. பனியால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியை ஜலந்தர் பகுதியில் வசிக்கும் இன்றைய தலைமுறையினர் கண்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகரித்துள்ள காற்று மாசு, அந்த மலைத்தொடரை மறைத்துவிட்டது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பனிமலை கண்ணில் தெரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் காற்று மாசு பல மடங்கு குறைந்திருக்கிறது.
அந்த வகையில், ஜலந்தர் பகுதியிலும் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்த மலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Leave a Reply