கொரோனா குறித்த தகவல் பறிமாற்றத்துக்காக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி இருப்பவர்கள், செல்போனில் செல்பி எடுத்து அனுப்பினால் மருத்துவக்குழு வீடு தேடி வந்து உதவி செய்வார்கள்.
சென்னை,
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளிவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவசர கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவக்குழுவினரால் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா குறித்த தகவல் பரிமாற்றத்துக்காக பிரத்யேக செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் செயலியை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வைத்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்து, பின் நிருபர்களிடம் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் குறித்த தகவல் பறிமாற்றத்திற்காக ‘கொரோனா மானிட்டரிங்’ என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மாநகராட்சி இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ‘ஆப்பிள்’ செல்போனை தவிர்த்து அனைத்து வகையான ‘ஆண்ட்ராய்டு’ செல்போனிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த செயலியை சென்னையில் உள்ள அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்து, இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்தால், செல்போனில் ஒரு செல்பி எடுத்து, இந்த செயலியில் விவரங்களை பதிவிட வேண்டும். அவ்வாறு பதிவிட்டவுடன், அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து, மருத்துவக்குழு அவர்களது வீட்டிற்கு சென்று உதவி செய்வார்கள்.
சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தினமும் மாநகராட்சி பணியாளர்கள் வீட்டிற்கு சென்று பரிசோதித்து வருகின்றனர். இருந்தாலும், இந்த செயலி அவர்களுக்கு கொரோனா குறித்த தகவல் பறிமாற்றத்துக்கு மிக சுலபமாகவும், அவர்களுக்கு மருத்துவ உதவியும் மிக வேகமாக கிடைக்க இந்த செயலி பயனுள்ளதாகவும் இருக்கும்.
இது மிகவும் எளிமையான ஒரு முறை. அனைவரும் உபயோகிக்க கூடிய வகையில் மிக எளிமையாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி முக்கியமாக கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Leave a Reply