காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து இரண்டு வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் நூலகராக இருப்பவர் வக்கீல் ஜி.ராஜேஷ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் காய்கறி, பழ வகைகள் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன. தேசிய அளவில் தோட்டக்கலை உற்பத்தில், தமிழகத்தின் பங்களிப்பு 5.8 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் 13.76 ஹெக்டேர் பரப்பில் வெங்காயம், தக்காளி, கத்தரி, வெண்டை போன்றவை பயிரிடப்படுகின்றன. இந்த பொருட்கள் நேரடியாக அரசு மற்றும் விற்பனை நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டது. அரசு சார்பில் மாவட்ட அளவில் 21 விற்பனை குழுக்கள் உள்ளன.

தமிழகம் முழுவதும் 268 ஒழுங்குமுறை விற்பனை மையங்கள் உள்ளன. அழுகும் தன்மை கொண்ட இந்த காய்கறிகள் மற்றும் பழங்களை பாதுகாக்க 108 குடோன்கள் உள்ளன. நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால், காய்கறி, பழங்களை விவசாயிகள் குப்பையில் கொட்டுகின்றனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகாவில் மட்டும் 150 ஏக்கரில் நேந்திரம், தர்பூசணி பயிரிடப்பட்டு அவற்றை விற்பனை செய்ய முடியாமல் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடுமையாக கஷ்டப்படுகின்றனர். எனவே, விவசாயிகளின் நலன்கருதி காய்கறி, பழங்கள் போன்ற அழுகக்கூடிய விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, சில விவசாய பொருட்களை சேமித்து வைப்பதற்கான கட்டணத்திற்கு வருகிற 30-ந்தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மேலும் சில சலுகைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு உதவுவதற்காக மாவட்டம், தாலுகா மற்றும் வட்டார அளவில் வேளாண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று கூறினார்.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஒய்.கவிதா, ‘இந்த இக்கட்டான காலத்தில் அரசே நேரடியாக விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், ‘காய்கறி, பழங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும். விவசாயிகளுக்கு உதவும்வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை உருவாக்குவதுடன், இந்த வசதிகள் குறித்து விவசாயிகள் அறிந்துகொள்ள செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *