ஊரடங்கால் மக்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உண்டு என மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் அலுவலக ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணிகளை கையாள தொடங்கி விட்டனர். குழந்தைகள் வேறு வழியில்லாமல் டி.வி. பார்த்தும், அறைக்குள்ளேயே விளையாடியும் பொழுதை கழித்து வருகிறார்கள். இப்படி வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து இதயவியல் மருத்துவர்கள் கூறியதாவது:-

உடல் உழைப்பு குறையும்போது பருமன் நிச்சயம் அதிகரிக்கும். உடல் பருமன் என்றைக்கும் நல்லது அல்ல. ஆரோக்கியமான உடல்தான் நம்மை நீண்ட காலம் வாழவைக்கும்.

தற்போது ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். வழக்கமான நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு முடிந்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள், இது தவறு.

20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை உடல் உழைப்பு இல்லாதபோது 5 கிலோ முதல் 10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லதல்ல. எனவே தினமும் வீட்டிலேயே தியானம், யோகாவில் ஈடுபடுங்கள். முடிந்தவரை வீட்டு வளாகத்திலேயே நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள். சும்மா உட்காராமால், பிள்ளைகளுடன் விளையாடி பரபரப்பாக இருங்கள். அடிக்கடி தூங்காதீர்கள். இதையெல்லாம் முறையாக கடைபிடித்தாலே உடல் பருமன் பிரச்சினையில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உடற்பயிற்சி ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியதாவது:-

உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத இந்த ஊரடங்கு காலத்தில் முடிந்தவரை கடின உணவுகளை குறைத்து கொள்ளுங்கள். அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணலாம். கீரைகளை அதிகம் உணவில் எடுத்து கொள்ளவேண்டும். குளிர்பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ், மோர், லஸ்சி, இளநீர் போன்ற பானங்களை அருந்துவது உடலுக்கு நல்லது. நல்ல ஓய்வு என்பது இரவு தூக்கம் தான். எனவே இரவு தூக்கத்தில் சமரசம் செய்யாதீர்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் குறித்த நேரத்தில் சாப்பிடுவது, குறித்த நேரத்தில் உறங்க செல்வதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இறைச்சி உணவுகள் சாப்பிட்டாலும் சுடுதண்ணீர் குடியுங்கள். வீட்டில் சிறிய சிறிய வேலைகளை செய்து முடிந்தவரை உங்கள் கலோரிகளை எரிக்க முயற்சி செய்யுங்கள். உடல் பருமன் பிரச்சினையில் சிக்கிடாமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *