காய்கறிகள், பழங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் என்.சுப்பையன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஒழிப்பு நடவடிக்கை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பழங்கள், காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்டந்தோறும் தற்போது 150 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகளால் விளைவிக்கப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் போன்றவற்றை பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டுகள் தேவை கண்டறிந்து உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களின் வெளிநடமாட்டத்தை குறைத்திடும் வகையில் அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு வீடுகள் தோறும் காய்கறிகள் வழங்குவதற்கு 500-க்கும் அதிகமான நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை மையங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் உணவுக்கு அன்றாட தேவையான பல்லாரி வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவை மராட்டியம், ஆக்ரா, கோலார் போன்ற இடங்களில் இருந்து தினந்தோறும் சுமார் 3 ஆயிரத்து 280 டன்னும், ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் தினந்தோறும் சுமார் 600 டன் இதர மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் வாழை, தர்பூசணி மற்றும் பல்வேறு காய்கறிகள் தினந்தோறும் சுமார் 1,300 மெட்ரிக் டன் அளவில் நாகர்கோவில், தென்காசி, ஒட்டன்சத்திரம், கோவை வழியாக கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயப்பணிகள் தொய்வின்றி நடைபெற தேவையான உரபொருட்களை விற்பனை செய்ய 9,871 உர விற்பனை நிலையங்கள் தினமும் திறக்கப்பட்டு தேவைக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் இதுவரை 2 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பில் காய்கறி பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. 1,02,500 ஹெக்டேர் பரப்பில் காய்கறி சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இந்த மாதம் 22 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி சாகுபடி செய்வதற்கு தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிராமங்கள்தோறும் 20 ஹெக்டேர் காய்கறி சாகுபடி செய்ய தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் சிறப்புத்திட்டம் தற்போது நிலவி வரும் சூழ்நிலையிலும், எதிர்வரும் மாதங்களில் காய்கறித் தட்டுப்பாட்டை போக்க மிகவும் உதவியாக இருக்கும். தமிழக அரசு வேளாண் பணிகளுக்கு தேவையான இடுப்பொருட்கள், டிராக்டர் போன்ற எந்திரங்கள் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல ஏதுவான அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் தினந்தோறும் விளைப்பொருட்கள் விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சாகுபடி பணிகளுக்கு தேவையான தொழில்நுட்ப விவரங்கள் இடு பொருட்கள் போன்றவற்றிற்கு வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களையும், மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave a Reply