கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக வாபஸ் பெறப்படும் என்று அகல் விளக்கை ஏற்றிய பிறகு முதல்- மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக வாபஸ்: எடியூரப்பா
எடியூரப்பா
பெங்களூரு :
முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் ஏற்பட்டு வரும் சேதங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. மக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளார். கர்நாடகத்தில் குறிப்பாக பீதர், மைசூரு, மங்களூரு, பெங்களூரு, கலபுரகி ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த வைரசை கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களை இணைக்கும் எல்லைகளை மூடுவது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை விதிப்பது, ஆன்மிக தலங்களில் மக்கள் கூடுவதை தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் நோக்கம் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதை மீறினால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இதை உணர்ந்து மக்கள் நடந்துகொள்ள வேண்டும்.
வளர்ந்த நாடுகளில் இந்த கொரோனா மிக வேகமாக பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடுகள் திணறி வருகின்றன. ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ந் தேதி நிறைவடைகிறது. இதை மேலும் நீட்டிக்க வேண்டுமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கலாம்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
பிரதமா் மோடியின் வேண்டுகோளை ஏற்று கர்நாடகம் முழுவதும் நேற்று ஒளி விளக்கு ஏற்பட்டது. முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் குடும்பத்தினருடன் அகல் விளக்குகளை ஏற்றினார். அதன் பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளின்படி, கர்நாடகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகழ் விளக்குகளை ஏற்றினர். சாதி மதம், இனம் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரும் விளக்குகளை ஏற்றினர். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான ஒற்றுமையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கொரோனாவை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 14-ந் தேதி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் 14-ந் தேதிக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற முடியும்.
அதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நமது ஆரோக்கியம் நமது கையில் உள்ளது. மக்களின் உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றும் சமூக பொறுப்பை நிர்வகிக்க சபதம் ஏற்பபோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Leave a Reply