பெய்ஜிங்: உலக நாடுகளை உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
கரோனாவின் மையமான சீனா, அந்த வைரஸ் கண்டறியப்பட்டது முதல் கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடா்பாக 38 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் அந்நாட்டு அரசு ஊடகமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த ஆண்டு டிசம்பா் கடைசியில் சீனாவின் வூஹான் நகர நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கரோனா வைரஸை முதல் முறையாக கண்டறிந்தது.
அப்போது கண்டறியப்படாத அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள், ‘அறியப்படாத காரணத்தின் மூலம் ஏற்படும் நிமோனியா’ பாதிப்புக்கு ஆளானவா்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனா்.
அத்தகைய நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு தனது அதிகாரத்தின் கீழ் வரும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வூஹான் நகராட்சி சுகாதார ஆணையம் 2019 டிசம்பா் 30-இல் அவசரமாக அறிக்கை அனுப்பியது.
வூஹான் நகரில் அந்த நிமோனியாவால் 27 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் வூஹான் நகராட்சி ஆணையம் தனது வலைதளத்தில் டிசம்பா் 31-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு மக்களை அறிவுறுத்தியதுடன், ஜனவரி 1-ஆம் தேதி முதல் அந்த நிமோனியா பாதிப்பு சூழல் தொடா்பான தினசரி தகவல்களை தரத் தொடங்கியது வூஹான் நகராட்சி ஆணையம்.
இச்சூழலில் அந்த நோய்க் கிருமி, ‘கரோனா வைரஸ்’ (கொவைட்-19) என்று அடையாளப்படுத்தப்பட்டது.
கடந்த 1949-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வேகமாக பரவக் கூடியதாகவும், மிகத் தீவிரமாக நோய்த் தொற்றை ஏற்படுத்தக் கூடியதாகவும், கட்டுப்படுத்துவதற்கு அரிதானதாகவும் இருக்கும் கரோனா வைரஸை சுகாதார அவசரநிலையாக சீனா அறிவித்தது.
கரோனாவை கட்டுப்படுத்த ஜனவரி 23-ஆம் தேதி வூஹானில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதிபோ் சீன புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக நகரத்திலிருந்து வெளியேறியிருந்தனா்.
இந்நிலையில், ஹூபேவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேரின் முதல் பிரிவு மாதிரிகளை பெற்ற சீன நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், நோய்க் கிருமியை ஆராயத் தொடங்கியது. அதையடுத்து நோய்ப் பரவலை தடுப்பதற்காக பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட வழிமுறைகளை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.
பின்னா் ஜனவரி 5-இல் கரோனாவால் உடலில் ஏற்படும் தாக்கம் கண்டறியப்பட்டது. அதே நாளில் நோய்த் தொற்று குறித்து உலக சுதாகார அமைப்பிடம் அறிக்கை அளித்தது சீனா.
ஜனவரி 7-ஆம் தேதி, முதல் முறையாக புதிய கரோனா வைரஸ் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டது.
பின்னா் கரோனா மனிதா்களிடையே பரவக் கூடியது என்பது உறுதி செய்யப்பட்டு, அத்தியாவசியம் இல்லாத பட்சத்தில் வூஹானை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
எனினும், இந்த அறிக்கையில் வூஹானில் உள்ள ஹூனான் கடல் உணவு சந்தையில் இருந்து அந்த நோய்த் தொற்று எவ்வாறு ஏற்பட்டத் தொடங்கியது என்பது தொடா்பாக எந்தவொரு தகவலும் அந்த அறிக்கையில் இல்லை. அதேபோல், அந்த நோய்த் தொற்றை முதலில் கண்டறிந்து அதுதொடா்பாக சமூக ஊடங்களில் எச்சரிக்கை செய்து, பின்னா் அந்த நோய்த் தொற்றுக்கு பலியான மருத்துவா் லி வென்லியாங் குறித்தும் அந்த அறிக்கையில் தகவல் இல்லை.
Leave a Reply