புதிதாக கரோனா வைரஸ் தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்துப் பார்த்ததில் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியிருப்பது அறியப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான இந்த ஆய்வின் முடிவு பற்றி இபயோமெடிசின் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிட்கோவேக், அதாவது பிரிட்ஸ்பர்க் கரோனா வைரஸ் வேக்சின், என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருந்தை எலிகளுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில், கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றலை இரு வாரங்களிலேயே அவை மிக அதிகளவில் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கரோனா வைரஸை எதிர்கொண்டு அழிக்கும் ஆற்றலை எலிகளுக்குச் செலுத்தப்பட்ட இந்த மருந்தின் அளவே பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“2003-ல் சார்ஸ், 2014-ல் மெர்ஸ் ஆகிய வைரஸ்களில் எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. இவ்விரு வைரஸ்களும் கரோனா வைரஸுக்கு மிக நெருக்கமானவை. இந்த வைரஸ்களை அழிப்பதில் ஒரு குறிப்பிட்ட வகைப் புரதத்துக்குப் பெரும் பங்கிருக்கிறது என்பதை ஏற்கெனவே நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியா கம்பாட்டோ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் இவர்.
நோயாளிகளிடம் பரிசோதித்துப் பார்க்கக் குறைந்தபட்சம் ஓராண்டு தேவைப்படும். தற்போது மிகவும் இக்கட்டான நிலை இருப்பதால், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இன்னமும் சற்று விரைவாக இந்த மருந்தைப் பொதுப் பயன்பாட்டுக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply