அமெரிக்காவை கொரோனா உலுக்கி எடுக்கிறது. அங்கு ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த 10 மருந்துகள் கண்டுபிடித்து, பரிசோதனை நடைபெற்று வருவதாக டிரம்ப் கூறி உள்ளார்.

வாஷிங்டன்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசுக்கு, இப்போது அமெரிக்கா அதிக விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. உலகில் சர்வ வல்லமை பெற்று விளங்கும் அமெரிக்காவை, கடந்த சில நாட்களாக கொரோனா உலுக்கி எடுக்கிறது. விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அந்த நாடு, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் அங்கு ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 31 ஆயிரத்து 935 பேரை கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது.

இதன் மூலம் அந்த நாட்டில் 4 லட்சத்து 35 ஆயிரம் பேரின் உடல் களுக்குள் இந்த வைரஸ் ஊடுருவி விட்டது.

50 மாகாணங்களிலும் தாக்குதல்

அதுமட்டுமின்றி தொடர்ந்து 2-வது நாளாக, ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். இது அங்கு இந்த வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கு கொண்டு சென்று உள்ளது.

ஜனவரி 20-ந் தேதி முதன் முதலாக கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவியது உறுதி செய்யப்பட்டது. இப்போது அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் தனது ஆதிக்கத்தை இந்த கொடிய வைரஸ் நிலைநாட்டி உள்ளது.

பொதுமக்கள் யாரும் முக கவசம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

ஆனாலும் இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் சரி, பலியாவோரின் எண்ணிக்கையும் சரி தொடர்ந்து ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது.

நியூயார்க் பரிதாபங்கள்

நியூயார்க் மாகாணத்தில் இந்த வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. அங்கு கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கையை விட நியூயார்க் மாகாணத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை தற்போது அதிகம் ஆகும்.

நியூயார்க் நகரில் மட்டுமே 81 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்து இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 779 ஆகும். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 6,268 ஆகி உள்ளதாக கவர்னர் ஆண்ட்ரூ கியுமோ தெரிவித்தார்.

லாரிகளில் உடல்கள்

பலியானவர்களின் உடல் களை வைப்பதற்கு பிணவறையில் இடமின்றி, ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டு உள்ள குளிரூட்டப்பட்ட லாரிகளில் போட்டு, பின்னர் இறுதிச்சடங்குக்கு கொண்டு செல்கிற நிலை உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க் மாகாணத்தை பொறுத்தமட்டில் இந்தளவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம், ஆசிய நாடுகள் அல்ல, ஐரோப்பிய நாடுகள்தான். அங்கிருந்துதான் இந்த நோய், நியூயார்க்கில் இறக்குமதியாகி பரவி இருக்கிறது என ஆய்வுத்தகவல்கள் தெரிவிப்பதாக சினாய் மலை இகான் மருத்துவ கல்லூரி மரபியலாளர் ஹார்ம் வான் பாகல் கூறி உள்ளார்.

தற்காலிக ஆஸ்பத்திரிகள்

நியூஜெர்சி மாகாணத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, மசாசூசெட்ஸ், பென்சில்வேனியா, புளோரிடா, இல்லினாய்ஸ், ஜார்ஜியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 5 இலக்கங்களில், அதாவது 10 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. வாஷிங்டனில் 10 ஆயிரத்தை எட்டிப்பிடிக்கும் நிலை உள்ளது.

கன்வென்சன் சென்டர்கள் என்று அழைக்கப்படுகிற மாநாட்டு அரங்குகளை தற்காலிக ஆஸ்பத்திரிகளாக மாற்றி கொரோனா வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கத் தொடங்கி உள்ளனர்.

கவச உடைகள் காலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர் கள் உள்ளிட்டோர் அணிகிற தனிப்பட்ட பாதுகாப்பு கவச உடைகள் இருப்பு 90 சதவீதம் காலியாகி விட்டதாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வை குழு தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே வெளிநாடுகளில் தவித்து வந்த அமெரிக்கர்கள் 50 ஆயிரம் பேர் அங்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார்.

மூன்றில் ஒருவரே உயிர் பிழைப்பு

கொரோனா வைரஸ் நோயின் தீவிர பிடியில் சிக்கி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்படுகிறவர்களில் மூன்றில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைப்பதாக அமெரிக்காவுக்கான சர்வதேச தொற்று நோய்கள் பிரிவின் தலைவர் டென்னிஸ் கரோல் தெரிவித்து உள்ளார்.

செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் சில மணி நேரம் அல்லது சில நாட்கள் மட்டுமே உயிர்வாழக்கூடிய சூழல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் கருப்பின மக்கள்தான் அதிகமாக இறப்பதாகவும், ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

இயல்பு நிலை எப்போது?

சீனாவின் உகானில் ஓரளவு இயல்பு நிலை திரும்புவதற்கு 11 வாரங்கள் ஆகி உள்ளன. ஆனால் அமெரிக்காவில் இயல்பு நிலை திரும்ப எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது பற்றி உறுதியான தகவல் இல்லை. அமெரிக்காவில் சோதனை வசதி குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

லூசியானா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் இருந்தபோதும், சோதனை வசதியில்லாமல் பலர் சொல்லிக்கொள்ளாமல் விட்டு விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சுவாச கருவிகள் தட்டுப்பாடு

ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில் பலருக்கு செயற்கை சுவாச கருவிகள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன்காரணமாக டெட்ராய்டில் உள்ள ஸ்டேண்டர்டு மோட்டார் நிறுவனம் ஆகஸ்டு மாதத்துக்குள் 30 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் தயாரித்து அளிக்குமாறு, போர்க்கால அதிகாரங்களை பயன்படுத்தி அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. சில மாகாணங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளதால் ஜூன் மாதத்துக்குள் 6 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகளை தயாரித்து அளிக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.

10 மருந்துகள் கண்டுபிடிப்பு

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரசுக்கான 10 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ளன. வேகமாக பரவி வருகிற கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு இதுவரை இல்லாதவகையில் முயற்சி எடுக்கப்படுகிறது.

இதில் அமெரிக்க தொழில் துறை உதவ முன்வந்து உள்ளது. அப்படியே டாக்டர்களும், விஞ்ஞானிகளும் இதில் உதவ முன்வந்து இருக்கிறார்கள். வரக்கூடிய நாட்கள் மிகச்சிறப்பானவையாக அமையும். நான் விரும்புவதை டாக்டர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *