ஒடிசாவில் யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஒடிசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேரை மிதித்து கொன்ற ஒற்றை யானை
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் அங்குள்ள பராகர் மாவட்டத்தின் பத்மபூர் நகருக்கு அருகே உள்ள ராஜபாதா சாஹி என்ற கிராமத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டு முன்பு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அந்த முதியவரை மிதித்து கொன்றது.
இதையடுத்து தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்த அந்த யானை அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த அந்த முதியவரின் மகன் மற்றும் பேரனையும் மிதித்தது. இதில் அவர்கள் இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்னர் அங்கிருந்து சென்ற அந்த யானை பக்கத்து கிராமத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்த 52 வயது நபரையும் மிதித்து கொன்றது. யானை தாக்கியதில் அடுத்தடுத்து 4 பேர் பலியான சம்பவம் கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினரிடமும், போலீஸ்காரர்களிடமும் வலியுறுத்தினர். மேலும் யானைகள் ஊருக்கு புகுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Leave a Reply