ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டாம் என யாரும் கூறவில்லை என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.

சென்னை,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது. ஆலோசனை கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நகர்புற உள்ளாட்சி பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த பணி 95 சதவீதம் முடிந்துள்ளது.

சென்னை மாநகராட்சியை தவிர்த்து பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 8 லட்சத்து 68 ஆயிரத்து 578 வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 57 ஆயிரத்து 929 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பல மருத்துவமனைகளில் மற்ற சிகிச்சைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனையும் கண்காணிக்க சென்னை மாநகராட்சி சார்பில் தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 3 ஆயிரத்து 955 தள்ளு வண்டிகள் மூலமாகவும், 937 வாகனங்கள் மூலமாகவும், மற்ற அனைத்து மாநகராட்சியில் 1,416 வாகனங்கள் மூலமாகவும், பேரூராட்சிகளில் 1,189 வாகனங்கள் மூலமாகவும் நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 6.25 லட்சம் மக்கள் தினந்தோறும் அம்மா உணவகத்தின் மூலம் பயன் அடைகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அம்மா உணவகத்தில் 102.88 லட்சம் இட்லிகளும், 39.13 லட்சம் கலவை சாதங்களும், 31.45 லட்சம் சப்பாத்திகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் வழங்கும் போது, அங்கு சமூக இடைவெளி இல்லாததால், அதன் வழிமுறைகள் தான் மாற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் தொடர்ந்து உணவு பொருட்களை வழங்கலாம். அதிகாரிகள் முன்னிலையில் வழங்கலாம் என கூறப்பட்டதே தவிர, அதனை கொடுக்க வேண்டாம் என யாரும் கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் டாக்டர் ராஜேந்திர குமார், அபாஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *