ஏழைகள், தொழில் துறையினருக்கு உதவ கூடுதல் நிவாரணம் விரைவில் அறிவிப்பு – மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கின. ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் அவர்கள் வருமானம் இல்லாமல் தவித்தனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள வசதியாக ரூ.1.70 லட்சம் கோடிக்கு சலுகைகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்தார். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்த சலுகைகள் போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி நேற்று பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

இந்தநிலையில் ஏழைகள் மற்றும் தொழில் துறையினருக்கு உதவ மத்திய அரசு விரைவில் கூடுதல் நிவாரணம் அறிவிக்கும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

உலக வங்கியின் மேம்பாட்டுக் குழுவின் 101 வது கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற போது அவர் இதைத் தெரிவித்தார். இது தொடர்பாக நிர்மலா சீதா ராமன் கூறியதாவது;-

இந்தியாவில் சுகாதார ஊழியர்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, பணப்பரிமாற்றம், இலவச உணவு மற்றும் எரிவாயு விநியோகம், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை அடங்கிய ரூ1.70 லட்சம் கோடிக்கு சலுகைகள் மேற்கொள்ளப்பட்டது.

வணிக நிறுவனங்களுக்கு குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு திடீர் பொருளாதார இழப்பை சமாளிக்க வருமான வரி ஜி.எஸ்.டி, சுங்கம், நிதி சேவை உள்ளிட்ட பல வி‌ஷயங்களில் அரசு நிவாரணம் வழங்கி உள்ளது. மனிதாபிமான உதவி வடிவத்தில் ஏழைகள் மற்றும் தொழில்துறையினருக்கு உதவ புதிய நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஊக்கத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.

மக்கள்தொகையின் அளவை கருத்தில் கொண்டு ஒரு பெரிய கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறக்கூடும் அபாயத்தில் இந்தியா இருந்தது. ஆனால் அதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் மத்திய அரசும்,சுகாதாரத் துறையும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.

சமூக விலகல் ,பயணக் கட்டுப் பாடுகள், சுகாதார தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடிந்தது. உலகளாவிய சமூகத்தின் பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில் நாங்கள் தேவைப்படும் நாடுகளுக்கு முக்கியமான மருந்துகளை வழங்குகிறோம். மருந்து தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து வழங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *