கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய போர், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க ஆயுதப்படைகள் தயார் நிலையில் உள்ளன என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுடெல்லி,

மும்பையில் கடற்படை வீரர் கள் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது என்ற தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக நாம் தொடுத்திருப்பது, பல பத்தாண்டுகளில் நடைபெற்றிராத கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய போர் ஆகும். நாம் ஒரு தேசமாக இதில் போர்க்காலம் போலவே செயல்படுகிறோம். சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கி ணைந்து, மக்கள் ஆதரவுடன் செயல்படுகிறோம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் அலுவலகம், சுகாதார அமைச்சகம் மற்றும் தங்கள் சொந்த மருத்துவ அமைப்புகள் விடுத்துள்ள அறிவிக்கையை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் கண்டிப்புடன் பின்பற்றி வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போர்தான் நாம் நம் வாழ்நாளில் சந்திக்கிற கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய போர். இது மனித குலத்துக்கு எதிரான போர் ஆகும்.

இது, நாட்டின் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக நாடு தொடுத்துள்ள போரில், பாதுகாப்பு படைகள் தகவல் தொடர்பிலும், வினியோக மேலாண்மையிலும், மருத்துவத்திலும் நிபுணத்துவத்துடன் உதவுகின்றன.

முன்னணி பாதுகாப்புத்துறை நிறுவனங்கள், கொரோனா வைரசுக்கு எதிரான போரில், தட்டுப்பாடு நிலவுகிற செயற்கை சுவாச கருவிகளையும், மருத்துவ ரீதியிலான முக கவசங்களையும், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கான அந்தரங்க பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களையும் தயாரித்து அளிக்குமாறு கூறி இருக்கிறோம்.

துருப்புகளின் நகர்வை ஆயுதப்படைகள் குறைத்துள்ளன. விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வேலை செய்ய ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உதவிகரமாக உள்ளன. ராணுவத்தின் செயல்பாட்டு அம்சங்களை கொரோனா வைரஸ் பரவல் பாதித்து இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அவர்கள் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறார்கள்.

அவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் எதிரிகளிடம் இருந்து நாட்டின் இறையாண்மையை காப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். எதிரிகள் மீது புலனாய்வு அடிப்படையிலான நடவடிக்கைகள் மூலம் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க நமது படைகள் தயார் நிலையில் இருக்கின்றன என்ற உறுதியை வழங்குகிறேன்.

கடந்த 2 வாரங்களாக காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்து வந்துள்ள நடவடிக்கைகளை நீங்கள் பார்த்து வந்திருக்கிறீர்கள். உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலான தாக்குதல்கள் மூலம், நாம் எதிரிகள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். இந்திய மண்ணின்மீது எதிரிகள் கால் வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *