ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நல்ல முடிவை எடுத்திருக்கிறார் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் ஏப்ரல் 14 வரை நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முடிவடைய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது ஊரடங்கை மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மாநிலங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தன்னுடைய சுட்டுரைப பக்கத்தில் ஊரடங்கு தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
“ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார். ஊரடங்கை முன்கூட்டியே அமல்படுத்தியதால் பல்வேறு வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியா இன்றைக்கு நல்ல நிலையில் உள்ளது. இப்போது ஊரடங்கை நிறுத்தினால், இதுவரை பெற்ற பலன்கள் அனைத்தும் வீணாகிவிடும். இந்தப் பலன்களை உறுதி செய்வதற்கு, ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாகும்.”
முன்னதாக, நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் ஆலோசனையின்போதும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.
Leave a Reply