ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க மேலும் ஒரு சலுகை தொகுப்பை அறிவிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பில் இருந்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தகத் துறையினருக்கும் நிவாரணம் அளிப்பதற்காக, ஊரடங்கு அறிவிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
2 நாட்கள் கழித்து, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள சலுகைகளை அவர் அறிவித்தார்.
இருப்பினும், அது போதாது, மற்றொரு நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை தணிக்கவும், பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும் மேலும் ஒரு நிவாரண தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
ஊரடங்கு விலக்கப்பட்டதற்கு பிந்தைய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, இந்த சலுகைகளை பரிசீலித்து வருகிறோம். நுகர்வை அதிகரிப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஊரடங்கு விலக்கப்பட்டதற்கு பிந்தைய சூழ்நிலைக்கு பொருத்தமாக பல்வேறு நல்வாழ்வு திட்டங்கள் மற்றும் இதர அரசு திட்டங்களை மாற்றி அமைப்பது பற்றியும் ஆலோசனை நடத்தினோம்.
கல்வி உதவித்தொகை, குறுவை சாகுபடி ஆகியவை தொடர்பான அறிவிப்புகள், எங்கள் பரிசீலனை பட்டியலில் உள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக தீர்வு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொரோனா பாதித்த நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை சிபாரிசு செய்ய பிரதமர் மோடி நியமித்த உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு அதிகார குழு இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையிலான மந்திரிகள் குழுவும், ஊரடங்கு நிலவரத்தை கண்காணித்து வருகிறது.
Leave a Reply