ஊரடங்கு நீட்டிப்பு பற்றி கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வரும் 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
2,500 வென்டிலேட்டர்கள் வாங்கவும் மற்றும் 4 லட்சம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’கள் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது. அவற்றில் தமிழகத்திற்கு 50 ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’கள் இன்றிரவு வந்து சேரும். கொரோனா பாதித்தவர்களுக்கு முதலில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. 3,370 செயற்கை சுவாச கருவிகள் உள்ளன. கொரோனாவை மறைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்டை மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் கூட்டுறவு துறை வழியே வாங்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடி உதவிகள் வழங்கப்படும்.
கொரோனா சிகிச்சை அளிக்க 137 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஊரடங்கு நீட்டிப்பு என்பது கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். இதேபோன்று மக்கள் தங்களால் இயன்ற நிதியை அரசுக்கு வழங்க வேண்டும். பொதுமக்கள் ரூ.100 கூட நிதி வழங்கலாம்.
10ம் வகுப்பு தேர்வை மாணவ மாணவியர்கள் எழுத வேண்டியது அவசியம். ஏனெனில், 10ம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான தேர்வாகும். அதனால் தேர்வு எப்பொழுது என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும்.
Leave a Reply