ஊரடங்கு நீட்டிப்பால் கவலைப்படத்தேவையில்லை, உணவுப்பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிற வகையில், நாட்டில் பிறப்பிக்கப்பட்டு இருந்த 21 நாள் ஊரடங்கு நேற்று முடிவுக்கு வர இருந்தது.
ஆனால் நேற்று நாட்டு மக்களிடம் டெலிவிஷனில் பேசிய பிரதமர் மோடி, மே மாதம் 3-ந்தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையொட்டி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், மக்களைப் பாதுகாக்கவும்தான் பிரதமர் ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுத்துள்ளார். இதற்காக பிரதமருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது உண்மையிலேயே பாராட்டத்தகுந்தது. இந்த ஒருங்கிணைப்பை நாம் இன்னும் தீவிரமாக்க வேண்டும். அப்போதுதான் நாட்டுமக்கள் ஊரடங்கை தீவிரமாக பின்பற்றுவார்கள். அவர்களுக்கு தேவையான எந்தவொரு பொருளுக்கும் பிரச்சினை வரக்கூடாது.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், துப்புரவுத்தொழிலாளர்கள், போலீசார், பாதுகாப்பு பணியாளர்கள் நல்லதொரு பங்களிப்பை செய்து வருகிறார்கள். இது உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த நெருக்கடியான தருணத்தில் அவர்களின் தைரியமும், புரிதலும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு வழிகாட்டுதல்களை பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிப்பட்டிருப்பதால் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்படலாம்.
ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகள் காட்டுகின்றன.
இந்தப் பதிவுகளில் அமித்ஷா கூறி இருப்பதாவது:-
நாட்டின் உள்துறை மந்திரி என்ற வகையில், உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், பிற பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்.
இதைப்பற்றி யாரும் கவலைப்படத்தேவையில்லை. பணக்கார மக்கள் முன்வந்து, தங்கள் பகுதியில் வசிக்கிற ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஊரடங்கின்போது பாதிக்கப்படுகிற ஏழை, எளிய மக்களுக்கு, பிரதமர் மோடி, கட்சித்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலைமையின் கீழான பாரதீய ஜனதா கட்சியினர் உதவிகள் செய்து வருவதை மனதாரப் பாராட்டுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Leave a Reply