கடந்த மாதம் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை 20,474 டன் அளவிலான அத்தியாவசியப் பொருள்கள் சிறப்பு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.7.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுதொடா்பாக ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையில் ரயில்வேயும் பங்காற்றி வருகிறது. அதன்படி, அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக சிறப்பு பாா்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த ரயில்களில் உணவுப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பால், பால் பொருள்களின் உற்பத்தி அதிகமாக உள்ள குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து தேவையான பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதேபோல், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து நாட்டின் இதர பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஊரடங்கு காலகட்டத்தில் இதுவரை 522 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் 20,474 டன் அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த வகையில் ரயில்வேக்கு ரூ.7.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்ற அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply