ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்தியா அரசியல், மதம் இல்லாமல் வாழ கற்றுக்கொண்டிருக்கிறது என்று பிரபல விஞ்ஞானி ஜி.மாதவன் நாயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா நடத்தி வருகிற போரில் முக்கிய நடவடிக்கையாக மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில் 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி கடந்த 24-ந்தேதி அறிவித்தார். 25-ந்தேதி அது அமலுக்கு வந்தது. இன்றளவும் நாட்டு மக்களால் ஒற்றுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதமர் மோடி அழைப்பு விடுத்தபடி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில், 130 கோடி மக்களும் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளையும், மெழுகுவர்த்திகளையும் ஏற்றி, தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்த காலக்கட்டத்தில் நாட்டில் பெரிய அளவில் அரசியல் காழ்ப்புணர்வான செயல்களை பார்க்க முடியவில்லை. நவராத்திரி, ராம நவமி, மகாவீர் ஜெயந்தி, குருத்தோலை ஞாயிறு போன்ற மத ரீதியிலான பண்டிகைகள் வந்தபோதும் மக்கள் கூட்டமாக கூடாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்றனர். இது உலக நாடுகளால் வியப்புடன் பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பிரபல விஞ்ஞானியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான ஜி.மாதவன் நாயர் பாராட்டு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்திய நாடு அரசியலும், மதமும் இன்றி வாழ கற்றுக்கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய சாதனை.
இந்தப் போக்கு ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும், அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, எல்லோரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தொடரப்பட வேண்டும்.
உண்மையில் இந்த வைரசுகள் பூமியில் செயலற்றவை. அவை, தங்களுக்கு சூழ்நிலை சாதகமாக அமையும்போது வெடிக்கும். கடந்த 3 நூற்றாண்டுகள் அல்லது அதற்கும் முற்பட்ட காலத்தைப் பார்த்தால், ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு முறை, இப்படி ஏதோ ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. எனவே இது ஒரு இயற்கையான நிகழ்வுதான்.
எந்த ஜாதி, மத பேதமுமில்லாமல், அரசியல் இல்லாமல் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு எழுந்து நின்று ஒற்றுமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதே உணர்வு அனைவரிடமும் தேசத்தை கட்டியெழுப்புவதிலும் ஏற்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக செயல்படுத்தப்படுகிற நடவடிக்கைகள் அதிகாரத்தில் இருப்பவர்களால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அவர்கள் இந்த சூழ்நிலையில் மிக நன்றாக செயல்படுகின்றனர். இதே நிலை தொடர வேண்டும்.
கொரோனா வைரசுக்கு எதிராக ஊரடங்கு உள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகளைப் பெறுவதில் இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நிலை இல்லை. எல்லா நிவாரணங்களை வழங்குவதிலும் இடைத்தரகர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத்தான் நிவாரண உதவிகள் கசிந்தன. மக்களுக்கு சென்றடைய வேண்டிய நன்மைகள் மறுக்கப்பட்ட தருணங் கள் உண்டு. இப்போது இடைத்தரகர்கள் இல்லாமல் நிவாரணங்கள் மக்களை சென்றடைகிற சூழல் உருவாகி இருப்பது, தொடருமேயானால் அதுவும் நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Leave a Reply