ஊரடங்கு காலத்தில் வேளாண்மை தடைபடாமல் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் சாகுபடிப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை எவ்வித தடையுமின்றி விற்பனை செய்வதற்கும் வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வேளாண் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் தமிழக மற்றும் மத்திய அரசும் விலக்களித்து ஆணையிட்டுள்ளன. இதனால், பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், ரசாயன உரங்கள் மற்றும் இதர இடுபொருட்களுக்கான விற்பனை நிலையங்களும், வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான வாடகை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

முக்கிய வேளாண் பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டதால், இதுவரை, அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக 100 டன்னுக்கும் மேற்பட்ட விதைகளும், ஒரு லட்சத்து 3 ஆயிரம் டன் ரசாயன உரங்களும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

6,900 ஏக்கர் நிலப்பரப்பில் நெல், 1,520 ஏக்கர் பயிறு வகைகள், 1,653 ஏக்கர் எண்ணெய் வித்துக்கள், 1,255 ஏக்கர் சிறுதானியங்கள், 873 ஏக்கர் பருத்தி, 183 ஏக்கர் கரும்பு என மொத்தம் 12 ஆயிரத்து 384 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும், 9,060 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களும் இந்த ஊரடங்கு தடை காலத்தில் விதைப்பு அல்லது நடவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெற்று நுகர்வோருக்கு நேரடியாக வழங்குவதற்காக தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 5,421 நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 21 ஆயிரத்து 652 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நடமாடும் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை தினமும் உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் வீட்டிலிருந்துபடியே காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்முதல் செய்ய ஏதுவாக மின்தோட்டம் (www.eth-ott-am.com) என்ற இணையதளம் மூலம் விற்பனை தொடங்கப்பட்டு இதுவரை ரூ.15.46 லட்சம் மதிப்பிலான 39 ஆயிரத்து 66 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் 5,426 நுகர்வோரின் வீட்டுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னை நகரில் சென்னை பெருநகர வளர்ச்சி வாரியத்தின் இணையதளம் (www.cm-d-a-c-h-e-n-n-ai.gov.in) மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து வகையான காய்கறி மற்றும் பழங்களை ஆர்டர் செய்து பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

20 வீடுகளுக்கு மேல் உள்ள தொகுப்பு மற்றும் அடுக்குமாடி குடியுருப்புகளாக இருந்தால் இந்த வாகனத்தை தங்கள் இருப்பிடத்திற்கே வந்து விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 7305050541,(42, 43, 44), 9025653376 மற்றும் 04424791133 என்ற தொலைபேசி எண்களில் காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 1 மணிவரை சென்னை மக்கள் தொடர்பு கொண்டு காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக வீட்டிற்கே வரவழைக்கலாம்.

தோட்டக்கலை விளைபொருட்களை சேமித்து வைக்க ஏதுவாக, விவசாயிகள் வேளாண்மை விற்பனைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 138 குளிர்பதனக் கிடங்குகளை கட்டணமின்றி உபயோகித்துக் கொள்ளலாம்.

இதுவரை 4,452 டன் விளைபொருட்கள் சேமிக்கப்பட்டு 276 விவசாயிகள், 188 வியாபாரிகள் மற்றும் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயனடைந்துள்ளர்.

தற்போது 144 உழவர் சந்தைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் அதிக அளவில் கூடும் 62 உழவர் சந்தைகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு அருகிலுள்ள பேருந்து நிலையங்கள், பள்ளிகள், மைதானங்கள் போன்றவற்றில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.

இதுவரை ரூ.77 கோடி மதிப்பிலான 25 ஆயிரத்து 126 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை, 43.27 லட்சம் நுகர்வோர்கள் வாங்கிப் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *