ஊரடங்கில் மக்களுக்கு உதவ அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளானவர்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனிநபர்கள் உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள் நேரடியாக வழங்கக்கூடாது. மாநகரங்களில் மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்டங்களில் கலெக்டர்கள் ஆகியோர் மூலமே வழங்கவேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 12ந்தேதி தடை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, ம.தி.மு.க. சார்பில் வைகோ ஆகியோர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘நாட்டில் உள்ள சுமார் 130 கோடி மக்களுக்கு தேவையான அனைத்தையும் அரசை மட்டும் அணுகி பெற முடியாது. ஒருவருக்கு தேவையானவற்றை அருகில் இருக்கும் சக குடிமக்கள் வழங்க வேண்டும் என்று பிரதமரே அறிவுறுத்தியுள்ளார். ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு உள்ளது.

உதவிகளை வழங்கவேண்டும் என்றால், அதற்கு 2 நாட்களுக்கு முன்பாக உரிய அனுமதியை அரசிடம் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், ‘ஒரு தன்னார்வலர் உணவு வழங்க சென்றால் அதை வாங்க 300க்கும் அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள். அவ்வாறு கூடும்போது நோய் தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது. இதை அனுமதிக்கக்கூடாது.’ என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கை இன்று தள்ளிவைத்த நீதிபதிகள், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் அதனடிப்படையில் தீர்ப்பு உடனே வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டடது.

இந்த சூழலில், இந்த மனு மீது இன்று கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில், அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவுவதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி, நிவாரண உதவிகள் வழங்க 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அதிகாரிகளுக்கு அதுபற்றிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *