ஈஸ்டர் திருநாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை:

கிறிஸ்தவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சிலுவையில் அறையப்பட்ட தினம், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம், ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், உலகில் அன்பும் அமைதியும் நிறைந்திட இயேசு பிரான் போதித்த தியாகம், அன்பு, சமாதானம், சகோதரத்துவம் போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும். கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து அடுத்த 3 நாட்களில் உயிர்த்தெழுந்து வந்ததைப்போன்று உலக மக்களும் மருத்துவர்கள் உதவியால் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டு வருவார்கள் என்பது உறுதியாகும்’ என தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை போல, இன்றைக்கு கொரோனா வைரஸ் கொள்ளை நோயிலிருந்து மனிதகுலம் பாதுகாக்கப்பட தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்யும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவலர்கள், மனித நேயத்தோடு உதவி புரிவோர் அனைவரின் முயற்சிகளும் வெற்றி பெற்று ஈஸ்டர் பண்டிகை அன்று எழுந்த மகிழ்ச்சியை போல மனிதகுலம் துயரத்திலிருந்து விடுபடட்டும் என்று ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘உலகத்தின் மாபெரும் அவதார புருஷரான இயேசு பிரான் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாய மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். மனிதர்களை துன்பத்திலிருந்து பாதுகாக்க மீண்டும் உயிர்த்தெழுந்த இயேசு பெருமான் கருணையால் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிச்சயம் மீள்வார்கள் என்று நம்புவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘கருணையே வடிவான இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் அவரவர் இல்லங்களில் இருந்தபடியே இறைவனை வழிபட்டு, பெரும் துன்பத்தில் இருந்து மனித குலம் விடுபடவேண்டும் என்கிற பிரார்த்தனையை முன்வைத்திடுவோம்’ என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், திருநாவுக்கரசர் எம்.பி., லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் நெல்லை ஜீவா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *