சென்னை :கொரோனா வைரஸ் ஒழிப்பு சிகிச்சைக்கு, பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிந்துரைத்து பிரசாரம் செய்ய, ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. இந்தியாவில், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையும், மற்றவர்களுக்கு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, மருத்துவர்கள் அல்லாத பலர், பல்வேறு சிகிச்சை முறைகளை, சமூக வலைதளங்கள் வழியாக பரப்பி வருகின்றனர். இதில் பல, ஆயுஷ் அமைச்சகம் அங்கீகரிக்காத மருத்துவ முறைகள்.
இதுகுறித்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:கொரோனாவுக்கான சிகிச்சை முறைகளை, மத்திய அரசு உரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நோய்க்கு, இயற்கை மருத்துவத்தில் சிகிச்சை உள்ளதாக, பலர் விளம்பரம் செய்கின்றனர்.
இந்த பிரசாரங்களை சம்பந்தப்பட்ட, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். மீறுவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா வெளியிட்ட அறிவிப்பிலும், ‘கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பாக, அரசு வழங்கும் தகவல்களை மட்டுமே, பத்திரிகைகள் வெளியிட வேண்டும். பாரம்பரிய மருத்துவமுறை பிரசாரங்கள் மற்றும் விளம்பரங்களை வெளியிடாமல், ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply