அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதன் இறுதி பெரும்பான்மை முடிவுகள் இன்று தெரிய வந்துள்ளன. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார்.

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர் என்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மேலும் கமலாவின் தாயார் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டவர் ஆவார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரம் மக்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது கமலாவின் வெற்றியால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வாழ்த்துக்கள் ஜோ பைடன், துணை அதிபராக இருந்த போது இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருந்தது. இந்திய-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு முறை நெருக்கமாக பணியாற்ற ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது மற்றொரு பதிவில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “உங்கள் வெற்றி அனைத்து இந்திய-அமெரிக்கர்களுக்கும் மகத்தான பெருமை அளிக்கக் கூடியது ஆகும். உங்கள் ஆதரவு மற்றும் தலைமைத்துவத்துடன் துடிப்பான இந்திய-அமெரிக்க உறவுகள் இன்னும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *