இந்தியாவில் கொரோனாவால் 170 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நேற்று அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,076 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்து இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவல் என்ற நிலையை அடையவில்லை. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் யார்-யாருக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளது என்பதை அறிய சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த குழுக்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துவார்கள். அந்த பகுதிகளில் அத்தியாவசிய பணிகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியே நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எந்தெந்த மாவட்டங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன? எந்தெந்த மாவட்டங்களில் கணிசமான பாதிப்பு உள்ளது? எந்தெந்த மாவட்டங்களில் நோய்த்தொற்று இல்லை என்பதை கண்டறிந்து வகைப்படுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த (‘ஹாட் ஸ்பாட்’) மாவட்டங்களாக 170 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. 207 மாவட்டங்கள் அத்தகைய பாதிப்புக்கு உள்ளாக சாத்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள அல்லது பரவும் வேகம் அதிகம் உள்ள மாவட்டங்கள் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்கள் ஆகும்.
இந்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரிசபை செயலாளர் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, மேற்கொள்ளவேண்டிய உத்திகள் பற்றி அவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply