புது தில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவருக்கும், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ப்பிணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே பிரசவம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். கரோனா பாதித்த கர்ப்பிணியும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவராவார்.
தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். குழந்தைக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆரோக்கியமாக இருக்கிறது. ஆனால் குழந்தையின் உடல்நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்கு இதுவரை கரோனாவுக்கான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஏதேனும் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செயயப்படும் என்று மகப்பேறு மருத்துவர் நீர்ஜா பாட்லா தெரிவித்துள்ளார்.
39 வார கர்ப்பிணிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டு, 10 சிறப்பு நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கரோனாவுக்கான சிறப்பு வார்டிலேயே அறுவை சிகிச்சை அறை உருவாக்கப்பட்டு, அங்கேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
குழந்தை தாயிடமே இருப்பதாகவும், தாய்ப்பால் அருந்த அனுமதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தது மிகப்பெரிய சாவலான விஷயமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக,
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த உறைவிட மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் அவரது கர்ப்பிணி மனைவிக்கும், கரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இவர்கள் இருவரும் எந்த வெளிநாட்டுக்கும் செல்லாத நிலையில், கரோனா பரவியுள்ளது. மருத்துவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
‘எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல்துறையைச் சோ்ந்த மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் உள்ள புதிய தனி வாா்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வந்தனா். அவா்களும் வீட்டில் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனா்.
சம்பந்தப்பட்ட மருத்துவரின் குடும்பத்தினருக்கும் நோய்ப் பரிசோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், அவரது மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.
மருத்துவருடன் தொடா்பு கொண்டவா்களைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட மருத்துவா், இதுவரை வெளிநாடு ஏதும் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது
இந்த நிலையில் எய்ம்ஸ் உறைவிட மருத்துவர் சமீபத்தில் ஒரு வழியனுப்பி விழாவிலும் கலந்து கொண்டுள்ளார். இவரையும் சேர்த்து தில்லியில் 8க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply