புதிய சோதனை கருவிகள் வந்திருப்பதன் மூலம் இனி இந்தியாவில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை – மருத்துவ கவுன்சில் தகவல்
கொரோனா பரிசோதனை கருவிகள்
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது பழைய முறைப்படி கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. இதன்படி ஒவ்வொரு பரிசோதனை நடப்பதற்கு பல மணி நேரம் ஆகின்றன. இதனால் அதிகம் பேருக்கு பரிசோதனை நடத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு 18 ஆயிரம் சோதனைகள் தான் நடத்த முடிகிறது.
நேற்று வரை 96 ஆயிரத்து 264 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளை விரைவில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் தான் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருப்பதால் அதற்கு தேவையான கருவிகளை வாங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
கொரோனா வைரஸ் பரிசோதனை
இதற்கான ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை கூடங்களையும் அதிகப்படுத்தியது. இதன்படி 136 அரசு ஆய்வகங்களும், 56 தனியார் ஆய்வகங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் பல ஆய்வகங்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுசம்பந்தமாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே உள்ள முறைப்படி சோதனை நடத்தியதால் பரிசோதனை முடிவு வருவதற்கு தாதமானதை அடுத்து புதிய முறையில் சோதனை நடத்தும் 10 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் மற்றும் அதற்கான சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விரைவாக சோதனை நடத்த முடியும்.
இவற்றை நாடு முழுவதும் அனைத்து இடங்களுக்கும் தடையின்றி வழங்குவதற்கு 7 டெப்போக்கள் நிறுவப்பட்டுள்ளன. அரசு ஆய்வகங்கள் மட்டுமல்லாமல், தனியார் ஆய்வகங்களும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் 200-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களை உருவாக்கி உள்ளோம். புதிய சோதனை கருவிகள் வந்திருப்பதன் மூலம் இனி ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் வரை சோதனை செய்ய முடியும். இதனால் விரைவாக நோயாளிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இது தவிர சோதனை நடத்தும் உயர்தர கருவிகளான கோபாஸ்-6800 என்ற 2 கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் ஒரே நேரத்தில் 1400 மாதிரிகளை சோதிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Leave a Reply