இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று வரை 273 ஆக உயர்ந்து இருந்தது.
கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து மராட்டிய மாநிலமே முதல் இடம் வகிக்கிறது. அங்கு 2,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்திலேயே அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 900-க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ள செய்தியில், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,152 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு 308 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் 7,987 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply