இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது.
புதுடெல்லி,
சீனாவில் உருவான கொடூர கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக் கானோருக்கு பரவி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வரை 8,447 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 9 ஆயிரத்தை தாண்டியது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 9,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மராட்டியத்தில் 1,900-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு சுமார் 149 பேர் இந்த கொடூர வைரசால் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரும், மத்திய அரசு அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசின் ‘ஹெல்ப்லைன்’ எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்
டெல்லியில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக தமிழகத்தில் 1,173 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கொரோனா தொற்று 247 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 194 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
Leave a Reply