இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது.
புதுடெல்லி,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப் படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும் கொரோனா தனது தாக்குதலை நிறுத்தவில்லை. மாறாக வைரசால் நாளுக்குநாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலையில் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,529 ஆகும். இதில் 71 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை 33 பேர் இந்த வைரஸ் தொற்றால் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். அடுத்தபடியாக மராட்டிய மாநிலத்தில் 13 பேரும், குஜராத்தில் 2 பேரும், அசாம் மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மாலை நிலவரப்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.
கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து மராட்டிய மாநிலமே முதல் இடம் வகிக்கிறது. அங்கு 1500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்திலேயே அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மராட்டிய மாநிலத்தில் மட்டும் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 900-க்கும் அதிகமானோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
Leave a Reply