இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டிவருகிறது. ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது இன்னும் இரண்டாவது கட்டத்தில்தான் இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் வேகமாகவே பரவுகிறது.

மூன்றாவது கட்டமான சமூக பரவலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிற நிலையிலும், நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 591 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

நேற்றைய நிலவரப்படி, மாநில அரசுகள் அளித்த தகவல்களின்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது. 24 மணி நேரத்தில் 17 பேர் பலியானதாக தகவல்கள் சொல்கின்றன. பலியானவர்கள் மொத்த எண்ணிக்கை 169ஆக உள்ளது.

இந்தியாவில், கடந்த 1 முதல் ஒன்றரை மாதத்தில் 1 லட்சத்து 39 ஆயிரம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் கொரோனா வைரஸ் பாதிப்பு அளவு 3 முதல் 5 சதவீதம் அளவுக்கு உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஐ.சி.எம்.ஆர். கூறி உள்ளது.

ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றி, 80 ஆயிரம் படுக்கைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக முதலில் 5 ஆயிரம் ரெயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி நடந்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். 3,250 பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணி முடிந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் செயற்கை சுவாச கருவிகள் மேலாண்மையிலும், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் திட்டத்திலும், ஆஸ்பத்திரிகளை தயார் நிலையில் வைக்கும் திட்டத்திலும் மத்திய அரசு உதவ விரும்புகிறது.

இதற்காக பன்முக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 9 மாநிலங்களுக்கு 10 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக இந்திய ரெயில்வே, 2,500 டாக்டர்களையும், 35 ஆயிரம் சார்பு மருத்துவ பணியாளர்களையும் அமர்த்தி இருக்கிறது.

ரெயில்வேயின் 586 சுகாதார பிரிவுகள், 45 துணைக்கோட்ட ஆஸ்பத்திரிகள், 56 கோட்ட ஆஸ்பத்திரிகள் மற்றும் 8 ஆஸ்பத்திரிகளின் உற்பத்தி பிரிவுகள், 16 மண்டல ஆஸ்பத்திரிகள் ஆகியவை கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

தொண்டு நிறுவனங்கள், உணவு தானியங்களை இந்திய உணவு கழகத்திடம் இருந்து வெளிச்சந்தை முறையில் நேரடியாக வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவற்றைக்கொண்டு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகளுக்கு அவர்களின் தேவைகளை சந்திப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே டெல்லியில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுகிற 20 இடங்கள் கண்டறியப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அத்தகைய 15 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டிருக்கிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *