தமிழகத்தில் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வகங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்று சுகாதார ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அதிகரித்தால் மட்டுமே மாநிலத்தில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதுள்ள சூழலில் மாநிலத்தில் 17 ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 11 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்தும் தனியார் ஆய்வகங்கள். சுகாதாரத் துறைச் செயலர் அளித்த தகவல்படி, ஓர் ஆய்வகத்தில் நாள்தோறும் நூறு மாதிரிகள் வரை பரிசோதனை செய்ய முடியும். அதன் அடிப்படையில் கணக்கிட்டால், நாளொன்றுக்கு 1,700 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யக் கூடிய திறனே தற்போது தமிழகத்தில் உள்ளது.

இந்த எண்ணிக்கை போதாது எனக் கூறும் சுகாதார ஆர்வலர்கள் அதனை அதிகரித்தால் மட்டும் தமிழகத்தில் கரோனாவின் வீரியம் எந்த அளவு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் பேரிடரை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 7}ஆம் தேதி தடம் பதித்தது. ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு முதன் முதலில் அந்த தொற்று கண்டறியப்பட்டது.

அப்போது அதன் வீரியமோ, பாதிப்போ சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், அதற்கு அடுத்த சில வாரங்களில் தமிழகத்தின் நிலை தலைகீழாக மாறிப்போனது. அதிலும், குறிப்பாக, தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்டோரில் பலருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் இதுவரை 364 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே, கரோனாவால் பாதித்தவர்களின் குடும்பத்தினர், அவரது சுற்றத்தினர் ஆகியோரை தனிமைப்படுத்தி வரும் மாநில சுகாதாரத் துறை, அவர்களில் காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்களை மட்டுமே பரிசோதனைக்குட்படுத்தி வருகிறது.

ஆனால், இந்த நடவடிக்கை கரோனா பரவலைத் தடுக்காது என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது;

பொதுவாக, மற்ற வைரஸ் பாதிப்புகள் அனைத்தும் அதன் அறிகுறிகள் தெரியத் தொடங்கிய பிறகுதான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும். ஆனால், கரோனாவைப் பொருத்தவரை ஒருவருக்கு நோய் பாதிப்பு இருந்து இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லாவிட்டாலும்கூட அவர் மூலம் பிறருக்குப் பரவும். அதனால்தான், சார்ஸ், மெர்ஸ், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான வேகத்தில் கரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதை உணர்ந்து தமிழகத்திலும் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், கரோனா பாதித்த பகுதிகள் அனைத்திலும் பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரியவரும்.

அமெரிக்கா, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக கண்டறியப்பட்டதற்கு பரிசோதனைகளை பரவலாக்கியதே காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த வாரத்துக்குள் 6 ஆய்வகங்கள்
அடுத்த வாரத்துக்குள் தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்காக மேலும் 6 ஆய்வகங்களை அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் போதிய எண்ணிக்கையிலான ஆய்வகங்கள் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதால் கூடுதலாக சில ஆய்வகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி அடுத்த வாரத்துக்குள் 6 புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படும். தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனை உபகரணங்கள் மாநில அரசிடம் இருப்பு உள்ளன என்றார் அவர்.

5 நாள்களில் 361 பேர்
கடந்த ஐந்து நாள்களில் மட்டும் தமிழகத்தில் 361 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தமிழகத்தில் கரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக சென்னை உள்ளது. மொத்தம் 81 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக திண்டுக்கல்லில் 43 பேரும், திருநெல்வேலியில் 36 பேரும், ஈரோட்டில் 32 பேரும், கோவையில் 29 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி, நாமக்கல்லில் தலா 21 பேருக்கும், கரூரில் 20 பேருக்கும் செங்கல்பட்டில் 18 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டவர்கள்
2.10 லட்சம்
தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
90,412
அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுவோர்
1580
கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள்
3684

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *