ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 37 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் கையெழுத்தானது.

ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே முறையான உடன்பாடு ஏற்படாததால் இந்த அமைதி ஒப்பந்தத்தால் எந்த பலனும் கிட்டவில்லை. தலீபான் கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடிக்கிறது.

இதனிடையே ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நேற்று அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த பேச்சு வார்த்தையில் இருந்து விலகுவதாக தலீபான்கள் அறிவித்தனர். இது அங்கு உள்நாட்டு போரின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

இந்த நிலையில் பால்க் மாகாணத்தில் உள்ள ஷோல்காரா மாவட்டத்தில் இருந்து அப்பாவி மக்கள் 7 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று கொலை செய்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என அரசு குற்றம் சாட்டியது. மேலும் பால்க் மாகாணத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தரை வழியாகவும், வான்வழியாகவும் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதி முல்லா கஞ்சாரி என்பவர் உள்பட 15 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதே சமயம் பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே கோர் மாகாணத்தில் உள்ள ஷாஹ்ரக் மாவட்டத்தில் ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற ராணுவ வாகனங்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதனை தொடர்ந்து, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானங்கள் உடனடியாக தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தின. இதில் 22 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆயுதங்கள் நிரப்பப்பட்ட அவர்களது வாகனங்கள் பல நிர்மூலமாக்கப்பட்டன.

இதற்கிடையில் காந்தஹார் மாகாணத்தில் வெளிநாட்டு படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வான்தாக்குதலை நடத்தியது யார் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அமெரிக்க போர் விமானம்தான் தாக்குதல் நடத்தியது என தலீபான் பயங்கரவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *