அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலிக்கு கொரோனா பாதிப்பு பற்றி கேள்விப்பட்டதும், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்துள்ளார்.

ஐதராபாத்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6412 ஆக உயர்ந்துள்ளது. 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை பராமரிப்பதில் கூடுதல் அக்கறை காட்டுகின்றனர்.

அவ்வகையில், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் மண்டல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்வர ராவ் என்பவர், தனது ஆடுகளுக்கு கொரோனா தாக்காமல் இருக்க முக கவசம் அணிவித்துள்ளார்.

இதுபற்றி வெங்கடேஷ்வர ராவ் கூறுகையில், ‘என்னிடம் 20 ஆடுகள் உள்ளன. அவற்றை நம்பியே என் குடும்பம் உள்ளது. வேறு எந்த விவசாய நிலமும் எங்களுக்கு கிடையாது. கொரோனா வைரஸ் குறித்து கேள்விப்பட்ட பிறகு, நான் வெளியே போகும்போதெல்லாம் முக கவசம் அணிகிறேன். அதேபோல் அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஒரு புலி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது பற்றி கேள்விப்பட்டதும், எனது ஆடுகளுக்கும் முக கவசங்கள் அணியத் தொடங்கினேன். வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது முக கவசம் அணிவித்தே அழைத்துச் செல்கிறேன்’ என்றார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *