கொரோனா வைரசுக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

கண்களுக்குத் தெரியாத கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போர் தொடுத்துள்ளன. ஆனாலும் “விட்டேனா பார்” என்கிற ரீதியில் எல்லா நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அந்த வைரஸ் பரப்பிக்கொண்டே போகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு உலக நாடுகள் எப்படி பதில் அளிக்கின்றன, தடுப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொண்டிருக்கின்றன என்பது பற்றி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தி உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிளேவட்னிக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடல், பயண தடைகள் விதித்தல், சுகாதாரத்துறையில் அவசர முதலீடுகள், நிதி மேலாண்மை, தடுப்பூசிகள் கண்டுபிடிக்க முதலீடுகள், பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்தல், விழிப்புணர்வு பிரசாரங்கள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், பரிசோதனை கொள்கை, தொற்றுக்கு ஆளானவர்களின் தடம் அறிதல் என 13 அம்சங்களின் அடிப்படையில் உலக நாடுகளின் நிலவரம் கருத்தில் கொள்ளப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட 73 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளையெல்லாம் இந்தியா பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை பெற்று திகழ்கிறது.

கொரோனா வைரசுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ள நாடு இந்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு 100-க்கு 100 என்ற முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைப்போன்று இஸ்ரேல், மொரீசியஸ், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றன.

செக் குடியரசு, இத்தாலி, லெபனான் ஆகிய நாடுகள் 90 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றுள்ளன. ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் 70-80 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. சீனா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் வெற்றிகரமாக கொரோனா வைரசை கட்டுப்படுத்தி விட்டதால் அவை இந்த ஆய்வு வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை.

இந்த ஆராய்ச்சியை நடத்தியவர்கள் ஆராய்ச்சி பற்றி கூறும்போது, “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்வியாளர்கள், மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து மாணவர்கள் குழுக்களிடம் இருந்து பெற்ற தகவல்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன” என குறிப்பிட்டனர்.

பேராசிரியர் தாமஸ் ஹாலே ஆராய்ச்சி முடிவு பற்றி குறிப்பிடுகையில், “எங்கள் ஆராய்ச்சி குறியீட்டால் முழு கதை யையும் கூற முடியாது. ஆனால் நாங்கள் சேகரித்துள்ள தரவுகள், முடிவு எடுப்பவர்களுக்கும் (அரசாங்கங்கள்), பொது சுகாதார நிபுணர்களுக்கும் ஆராய்வதற்கு உதவியாக இருக்கும். கொரோனா வைரசுக்கு எதிரான அரசாங்கங்களின் நடவடிக்கைகள் பயனுள்ளவையாக இருந்தன என்று புரிந்து கொள்வதற்கான முதல் படியை எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் தந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய உடனேயே மத்திய அரசு சுதாரித்துக் கொண்டது, நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது, 21 நாள் ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தியது, பொது போக்குவரத்தை முடக்கியது, பன்னாட்டு பயணங்களை தடை செய்தது, ஏழை எளியோருக்கு ஊரடங்கு காலத்தில் பட்டினி கிடக்கிற நிலை வராமல் இருக்க உணவுதானியங்கள் உள்ளிட்ட நிவாரணங்கள் அறிவித்து வழங்க தொடங்கியது, ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை சர்வதேச அளவில் கவரப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *