தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பொழுது போக்குக்காக தொலைக்காட்சி வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இந்த பணியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மேற்பார்வையிட்டார். அப்போது டாக்டர்கள், தீயணைப்பு வீரர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவரும் ‘வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்,’ ‘ஒற்றுமையாக இருப்போம், அரசுக்கு ஒத்துழைப்போம்’ என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழ்நாடு தீயணைப்பு துறை தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் உள்பட 4 ஆயிரத்து 500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறது.

பல நாட்கள், பல தூய்மை பணியாளர்கள் கொண்டு செய்ய வேண்டிய பணியை, ஒரு மணி நேரத்தில் முழு வளாகத்திலும் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்துவிடுகின்றனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு அனைத்து துறைகளையும் உள்ளடக்கி போர்கால அடிப்படையில் செய்து வருவதால், பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சென்னை ராமசந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1,800 படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர். மியாட் மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட ஒரு ‘பிளாக்’ அளிக்க முன்வந்துள்ளனர். அதேபோல் சவீதா மருத்துவமனையும் முன்வந்துள்ளது.

தமிழகத்தில் 19 அரசு மருத்துவமனைகளை கொரோனாவுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்க தேர்ந்தெடுத்துள்ளோம். கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல், மன வலிமையோட இருக்க வேண்டும் என்பதற்காக, முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் பொழுது போக்கு அம்சமான தொலைக்காட்சி வசதியை ஏற்படுத்தியுள்ளோம். 5 வேளையும் அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு சத்தான உணவுகளை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் அரசு சார்பில் 11 இடங்களிலும், தனியார் சார்பில் 6 இடங்கள் என மொத்தம் 17 இடங்களில் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் ஆய்வகங்கள் உள்ளது. இதனை அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆய்வகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கிருமி நாசினி தெளிக்கும் பணியின் போது ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிசந்திரன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மணி, மருத்துவ நிலைய அதிகாரி ஆனந்த் பிரதாப் உள்ளிட்டோர் இருந்தனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *