அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுவாசக்கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய 150 பார்சல்கள் சென்னைக்கு சரக்கு விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்ட உள்ளன.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனாலும் நோய் பரவுதலை முற்றிலும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ கருவிகள் தேவைக்கு ஏற்ப போதுமான அளவு இல்லாமல் இருந்தது.
உடனடியாக மத்திய அரசு நாட்டில் உள்ள பெரிய தொழிற்சாலைகளில் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை சற்று ஒத்திவைத்து விட்டு தற்போது நோயாளிகளுக்கு தேவையான சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்கள்) தயாரிக்க கேட்டுக்கொண்டது. அதன்படி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்ளிட்ட நிறுவனங்கள் சுவாசக்கருவிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு தேவையான மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளவும் அனுமதி அளித்தது.
சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளான மறைமலைநகர், ஒரகடம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கார் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுவாசக்கருவிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மலேசியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள சுவாசக்கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து இருந்தனர்.
அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு சரக்கு விமானம் மூலம் 150 பெரிய பார்சல்களில் சுவாசக்கருவிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வந்தன. இவற்றுடன் அமெரிக்காவில் இருந்து கைகளில் அணியும் நவீன கை உறைகள் அடங்கிய பெரிய பார்சல் ஒன்றும் வந்தது.
விமானநிலையத்தில் சுங்கத்துறை சரக்கு கையாளும் முனையத்தில் அதிகாரிகள் பரிசோதனை செய்த பின்னர் உரியவர்களிடம் பார்சல்களை ஒப்படைத்தனர். இந்த பார்சல்களை எடுத்து சென்ற நிறுவனங்கள் இதில் உள்ள மூலப்பொருட்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் சுவாசக்கருவிகளை தயாரித்து தேவைப்படும் இடங்களுக்கு அனுப்ப உள்ளனர்.
மேற்கண்ட தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Leave a Reply