அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை அனுமதித்த பிரதமர் மோடியின் உதவியை மறக்க மாட்டோம் என்று டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வாஷிங்டன்,
இந்தியா, மலேரியா காய்ச்சல் சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஆகும். இந்த மாத்திரைகள், தற்போது உலகமெங்கும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சையிலும் நல்லதொரு நிவாரணத்தை தருவது சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த மாத்திரைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்து இருந்தது. ஆனால் டிரம்ப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த தடை விலக்கப்பட்டு விட்டது.
அமெரிக்காவுக்கு இந்தியா 2 கோடியே 90 லட்சம் மாத்திரைகளை அனுப்பி வைக்க பிரதமர் மோடி அனுமதி அளித்தார். இதையொட்டி பாக்ஸ் நியூசிடம் பேசிய டிரம்ப், மோடியை பாராட்டினார். அவர் உண்மையிலேயே நல்லவர் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-
தற்போது அமெரிக்காவில் எழுந்துள்ள கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், நாம் என்ன கேட்டுக் கொண்டோமோ அதற்கு பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு பயங்கரமான மனிதர். அவர் செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
அசாதாரணமான நேரங்களில் நட்புறவில் இன்னும் நெருக்க மான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்காக இந்தியாவுக்கு நன்றி. இந்திய மக்களுக்கும் நன்றி. இந்த உதவியை மறக்க மாட்டோம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, இந்த போராட்டத்தில், உதவி செய்த உங்கள் பலம் வாய்ந்த தலைமைக்காக மட்டுமல்ல, மனித நேயத்துக்காகவும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த டுவிட்டர் செய்தி வைரலாக பரவியது. 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘ரீடுவிட்’ செய்தனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’ தெரிவித்துள்ளனர்.
Leave a Reply