அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 வட்சத்தை தாண்டியது. நமக்கு நேர்ந்தது பயங்கரமான விஷயம் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாஷிங்டன்,

சீன நாட்டின் உகான் நகரில் தோன்றினாலும், கொரோனா வைரஸ் தொற்று நோய், அமெரிக்காவை பிடித்து ஆட்டுவித்து வருகிறது. உலகின் பிற எந்த நாட்டைக்காட்டிலும் அமெரிக்காவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.

அந்த வகையில் அங்கு பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிகையும் 37 ஆயிரத்தை கடந்து செல்கிறது.

உலகத்தின் நிதித்தலைநகரம் என்ற பெருமைக்குரிய அமெரிக்காவின் நியூயார்க் நகரம், கொரோனா வைரசால் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தை அனுபவித்து வருகிறது. அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது.

14 ஆயிரத்துக்கும் கூடுதலானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.இதனால் கொரோனாவின் தொற்று மையமாக நியூயார்க் நகரம் மாறியுள்ள பரிதாபம் நேர்ந்துள்ளது.

நியூயார்க்கின் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் இந்த வைரஸ் 78 ஆயிரம் பேரை பாதித்திருக்கிறது. 3,800 பேரின் உயிரைப் பறித்திருக்கிறது.

இந்தநிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் இதுவரை 37 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்த பரிசோதனை நடந்துள்ளது. அதுமட்டுமல்ல, அமெரிக்காவில்தான் பிற நாடுகளில் இல்லாத அளவுக்கு வலுவான, நம்பகமான, துல்லியமான சோதனை முறை உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக எனது நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்காவிட்டால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகளவில் இருந்து இருக்கக்கூடும்.

1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலானவர்கள் இங்கே இந்த வைரசால் உயிரிழக்கக்கூடும் என கணிப்புகள் இருந்தாலும்கூட 65 ஆயிரம் பேர்வரைதான் பலி இருக்கும்.

நமது நாட்டுக்கு இப்படி நேர்ந்திருப்பது பயங்கரமான விஷயம்தான். நமக்கு மட்டுமல்ல 184 நாடுகளுக்குமே இது ஒரு பயங்கரமான விஷயம்தான். இது ஒருபோதும் மீண்டும் நடக்கக்கூடாது.

அமெரிக்காவின் அறிவியல் விவேகத்தால், கொரோனா வைரசுக்கு எதிரான இந்தப் போரில் இறுதி வெற்றி சாத்தியப்படும்.

கடந்த சில மாதங்கள் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் சவாலான மாதங்களாக ஆகிவிட்டன. கண்ணுக்குத் தெரியாத இந்த எதிரி கடினமானவன். ஆனால் நாட்டின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *