வாஷிங்டன்: அமெரிக்காவில் பிற சமூகங்களை விட கருப்பின மக்கள் அதிகளவில், வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இறந்தவர்களில் கணிசமானவர்களும் அவர்கள் தான் என அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வாரம் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. செவ்வாயன்று (ஏப்., 7) மட்டும் 1,800-க்கும் அதிகமானவர்களை அந்நாடு இழந்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையிலான இறப்பு இதுவாகும். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில், இறந்தவர்களின் எண்ணிக்கையில் 40% முதல் 70% வரையிலானவர்கள் கருப்பினத்தவர்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க சமுதாயத்தில் நிலவும் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை ஆகியவை கருப்பின அமெரிக்கர்களையும், பிற சிறுபான்மையினரையும் வைரஸால் அதிகம் பாதிக்கக்கூடிய நிலையில் வைத்திருக்கின்றன. அவர்களின் குடியிருப்புகளை பிரித்துவைத்திருப்பது, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அபாயம் என பலவற்றிலும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இவர்கள் வைரஸ் தொற்று ஆளாவதால், கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள் என அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கமாரா பிலிஸ் ஜோன்ஸ் தெரிவித்தார்.
கருப்பின மக்களில் பலர் அடிமட்ட வேலைகளை செய்கின்றனர். அவர்களால், சுகாதார வசதியை நாட முடிவதில்லை, இதன் காரணமாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அதிகம் வெளி வேலைகள் பார்ப்பதால், அதிகம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிறார்கள், அதனால் இறக்கிறார்கள் என மருத்துவர் பிலிஸ் கூறினார். லூசியானா மாநிலத்தில், இறந்தவர்களில் 70% பேர் கருப்பினத்தவர்கள். அம்மாநில ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இவர்கள் எண்ணிக்கை 32% மட்டுமே. இலினாய்ஸ் மாநிலத்தில் இறந்த நோயாளிகளில் சுமார் 42% பேர் கருப்பினத்தவர்களாக உள்ளனர், மாநில மக்கள்தொகையில் அவர்கள் எண்ணிக்கை 15% மட்டுமே.
மிசசிகன், மாநில மக்கள் தொகையில் 14% மட்டுமே கருப்பினத்தவர்கள். ஆனால், கொரோனாவால் அங்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் 40% பேர் அவர்கள் தான். சிகாகோவில் அதிகபட்சமாக, இறந்தவர்களில் 72% பேர் கருப்பினத்தவர்களாக உள்ளனர். இந்த புள்ளிவிவரங்களை அந்தந்த மாநில கவர்னர்கள் நேற்று(ஏப்.,07) வெளியிட்டுள்ளனர்.
நியூயார்க்கில் நிரம்பி வழியும் பிணவறை!
கொரொனாவால் நிலைகுலைந்து போன மாநிலமாக, நியூயார்க் மாநிலம் விளங்குகிறது. அம்மாநிலத்தில் மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,500-ஐ கடந்துள்ளது. இதில் 3,500-க்கும் மேற்பட்டோர் நியூயார்க் மாநகரைச் சேர்ந்தவர்கள். 2001 இரட்டைக் கோபுர தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கையை (2,753) விட, கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகும். இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. வேறு வழியின்றி அரசுக்கு சொந்தமான பண்ணைகளில், உணவு தானியங்கள் சேமிக்க பயன்படும் குளிரூட்டப்பட்ட கட்டடத்தில், உடல்களை சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.
Leave a Reply