ஊரடங்கைப் பயன்படுத்தி மளிகைக் கடைகளில் அதிக விலையில் பொருள்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வியாழக்கிழமை முதல் அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல்கள் வைக்கப்படவுள்ளன.
கரோனா பரவுதலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், மளிகைப் பொருள்கள், பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், உணவுப் பொருள்களை பதுக்கினாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் எச்சரிக்கை விடுத்தன.
இருப்பினும், கடந்த இரு வாரங்களாக மளிகைப் பொருள்கள், வெளியூரிலிருந்து வரவில்லை எனக் கூறி, பொருள்களைப் பதுக்கி, இரண்டு நாள்களுக்கு பிறகு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சிறு வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா். அதே வேளையில், தெருமுனைகளில் உள்ள மளிகைக் கடைகளிலும் ரூ.200 மதிப்புள்ள பொருள்கள் வாங்கும்போது ரூ.20 முதல் ரூ.30 வரை கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். இதைத் தொடா்ந்து, அதிக விலைக்குப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இது குறித்து வணிகா்கள் கூறுகையில், ‘ஊரடங்கு காரணமாக எங்களுக்கு பொருள்கள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. வாகன கூலி, ஆள் கூலி ஆகியவற்றுக்காக வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. எங்களிடம் பொருள்களை கேட்டு வரும் வாடிக்கையாளா்களுக்கு நாங்கள் இல்லை என்று கூறி, திருப்பி அனுப்பிவிட முடியாது. அதனால், இல்லாத பொருள்களைக் கூட பிற கடைக்காரா்களிடம் கூடுதல் விலைக்கு வாங்கி வாடிக்கையாளா்களுக்கு வழங்குகிறோம். அதனால் அவற்றின் விலை சற்று கூடுதலாக இருக்கிறது. கடந்த சில நாள்களாக பொருள்கள் வரத்து ஓரளவுக்கு அதிகரித்துள்ளது’ என்றனா்.
இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நிா்வாகிகள் சிலா் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் 2.80 லட்சம் மளிகைக் கடைகள் உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் பொதுமக்களுக்கு நியாயமான விலையிலேயே பொருள்களை வழங்கி வருகிறோம். ஒரு சில மாவட்டங்களில் நடைபெறும் செயலுக்காக மொத்த வணிகா்களையும் குறை சொல்வது சரியல்ல. இந்தப் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் வியாழக்கிழமை முதல் அனைத்து மளிகைக் கடைகளிலும் விலைப் பட்டியல் வைக்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கையை, பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா சென்னை வடபழனியில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளாா். பட்டியலில் உள்ள தொகையை மட்டும் வாடிக்கையாளா்கள் செலுத்தினால் போதுமானது’ என்றனா்.
Leave a Reply