புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது. சமூக பரவலை தடுக்க ஏப்.,14 வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஏப்.,14க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
பிஸினஸ் டுடே மற்றும் மணி கண்ட்ரோல் தளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் ஆலோசனை குழு, ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தேதி, முழு ஊரடங்கா? அல்லது பகுதி ஊரடங்கா? நோய் உச்சமடையும் காலம் போன்ற தரவுகளை மதிப்பீடு செய்து, எந்த நாட்டில், எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என அறிக்கை அளித்துள்ளது. அதில் தான் இந்தியாவில் ஜூன் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கு முன்பு ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என கூறியுள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு எத்தனை உள்நோயாளி படுக்கைகள் உள்ளன, ஒரு லட்சம் பேரில் எத்தனை பேருக்கு சுவாச நோய்கள் உள்ளன, தொற்று நோயை சமாளிக்கும் திறன் ஆகிய காரணிகளும் இதில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் உள்நோயாளி படுக்கைகள் குறைவாகவும், சுவாச நோய் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று நோயை சமாளிக்கும் திறன் மோசமாகவும் உள்ளதாக பாஸ்டன் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. தற்போது நிலைமை மோசமாக உள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஜூலை வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் ஜூன் 3-வது வாரம் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் என இந்த ஆய்வு அதிர்ச்சித் தருகிறது. சமூக விலகல் மற்றும் தூய்மையை கடைப்பிடிப்பது ஒன்றே பேராபத்தில் நம்மை காப்பாற்றும்.
Leave a Reply