2-ஆம் உலகப் போருக்கு பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐநா தலைவர் கூறினார்.
ஜெனீவா,
உலக நாடுகள் முழுவதையும் தற்போது கொரோனா வைரஸ் ஒரு சேர பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது உலக வல்லரசு நாடான அமெரிக்கா என்பதிலிருந்தே, அந்த நோயின் தீவிரத்தை உணர முடியும். வளர்ந்த நாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பவில்லை.
இந்த சூழலில், 2 ஆம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான சுகாதார நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளது என்று ஐநா தலைவர் ஆண்டனியோ கட்டர்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- “ ஐக்கிய நாடுகள் அவையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இது போல ஒரு உலக சுகாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. சுகாதார நெருக்கடியை விட மிகவும் தீவிரமானது. இது ஒரு மனித நெருக்கடி” என்றார்.
ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட பிறகு, மிக மோசமான உலக நெருக்கடியாக, ஏன் கொரோனா பெருந்தொற்றை நீங்கள் கருதுகிறீர்கள் என்று கட்டர்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த கட்டர்ஸ், ஒருபுறம் உலக மக்கள் அனைவருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இன்னொரு புறம், பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்றார். மேலும், “இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை எனவும் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், சிகிச்சை ஆகிய சுகாதார திறனை அதிகரிக்க வேண்டும்” என்றார்.
Leave a Reply