கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான மாதாந்திர இ.எம்.ஐ.யை வங்கிகள் வசூலிக்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பொருளாதார சிக்கல் அனைத்து தரப்பினரையும் எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களை இன்று சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. மற்றும் வட்டி வசூலிக்கப்படாது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவு, அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் அதனை படித்து தெரிந்து கொள்ளலாம். இதுபற்றி அனைத்து வங்கிகளுக்கும் மீண்டும் ஒரு முறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோன்று தமிழக முதல்வரும் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம்
(30.3.2020) கலந்தாய்வு செய்த பின்னர், இன்று உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி, கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன்
1. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது.
2. வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
3. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
4. அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
5. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த
மூன்று மாத கால அவகாசம் (30.6.2020 வரை) வழங்கப்படுகிறது.
6. ‘கரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும்
Leave a Reply