தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பங்கேற்ற ரோஹிங்கயாக்களை அடையாளம் காணுமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், பஞ்சாபில் தேராபாஸி, தில்லி, ஜம்மு ஆகிய பகுதிகளில் ரோஹிங்கயா முஸ்லிம் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து, கடந்த மாதம் ஹரியாணா மாநிலம் மேவாத், தில்லி நிஜாமுதீன் ஆகிய இடங்களில் தப்லீக் ஜமாத் சாா்பில் நடைபெற்ற மாநாடுகளில் ரோஹிங்கயாக்கள் கலந்து கொண்டுள்ளனா்.
நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய ரோஹிங்கயாக்களில் பலா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் சந்தேகிக்கிறது. அவா்களை கண்டறிந்து கரோனா தொற்றுக்கான சோதனையை செய்து அவா்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிா்வாகங்களையும் மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
மேலும் தில்லி ஷ்ரம் விஹாா், ஷாஹீன்பாக் ஆகிய இடங்களில் தங்கியிருந்த ரோஹிங்கயாக்கள் இன்னும் தங்கள் இடங்களுக்குத் திரும்பவில்லை என்று உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பிய அறிவுறுத்தல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 17,500 ரோஹிக்கயாக்கள் அகதிகளாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகிறது. ஆனால், நாடு முழுவதும் 40,000 ரோஹிங்கயாக்கள் இருக்கக் கூடும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
Leave a Reply