ஊரடங்கினால் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்படும் பெண்கள் புகார் செய்ய பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன் எண்ணை விளம்பரம் செய்யவேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக் கீல் சுதா ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தேசிய பெண்கள் ஆணையத்தின் அறிக்கையின்படி, ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இதுவரை 257 புகார்கள் வந்துள்ளன. அதில், 69 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானது ஆகும். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள 24 குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆன்லைன் மூலம் 7 மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளை மட்டுமே அணுக முடிகிறது. 24 பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், அவர்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை.
தொடர்பு கொண்ட அதிகாரிகளும், குடும்ப வன்முறை புகார்களை விசாரிக்க வேண்டும் என்று அவசர உத்தரவுகளை அரசு பிறப்பிக்கவில்லை என்றும், குடும்ப வன்முறை சம்பவங்களால் மனஅழுத்தத்தில் உள்ள பெண்களை வீட்டில் இருந்து அழைத்துவர அரசு துறை வாகனங்களை பயன்படுத்த முடியாது என்றும் கூறுகின்றனர்.
குடும்ப வன்முறை சம்பவங்களில் பெண்களுக்கு உதவும் விதமாக எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் இருந்து கிடைப்பது இல்லை. உத்தரபிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இணையத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் மாவட்ட அளவில் காணொலி காட்சி மூலம் புகார்களை விசாரிக்கவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பாதுகாப்பு அலுவலர்களின் செல்போன் எண்களை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அரசு விளம்பரப்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கிற்கு தமிழக அரசு வருகிற 23-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Leave a Reply