ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், போன்றே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்தும் அதிகமான உயிர்ப்பலி கொடுத்துள்ளது.
லண்டன்,
இதில், முதியோர் இல்லங்களில் இறந்தவர் சதவீதத்திலும் இந்த நாடுகளுக்கு இடையே ஏறக்குறைய ஒற்றுமை காணப்படுவது, வேதனை கலந்த ஆச்சரியம்.
ஆம், இந்த 4 நாடுகளிலுமே இதுபோன்ற இல்லங்களில் வசித்த சுமார் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான முதியவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமலும், போதிய கவனிப்பும் இன்றி கொரோனாவுக்கு தங்கள் உயிரை பறிகொடுத்து உள்ளனர்.
இதை உறுதிப்படுத்துவதுபோல், இங்கிலாந்தின் முதியோர் இல்லங்களில் வசிக்கும் வயதானவர்கள் நிலையும் கொரோனா தாக்குதலுக்குப் பின், மிக மோசமாக காணப்படுகிறது.
அந்நாட்டில் சிறியதும், பெரியதுமாக சுமார் 2 ஆயிரம் முதியோர் இல்லங்கள் உள்ளன.
இவற்றில் 70-க்கும் மேற்பட்ட இல்லங்களில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 521 முதியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பீட்டில்பரோ என்ற நகரில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்களது இறுதி காலத்தை கழித்து வந்த 140 முதியவர்களில் 24 பேர் கடந்த 10 நாட்களில் கொரோனாவுக்கு இரையாகி இருக்கின்றனர்.
ஒரேநாளில் 6 பேர் பலியானதும் இதில் அடங்கும். (இன்னும் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்) அதாவது, இந்த இல்லத்தில் சராசரியாக 6 பேருக்கு ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
இங்கிலாந்தின் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
ஆனால் அந்நாட்டின் ‘அல்சைமர்ஸ் சொசைட்டி’யோ இந்த எண்ணிக்கை 2,500 ஆக இருக்க வாய்ப்புள்ளது, எனக் கூறுகிறது.
அதேநேரம், அரசாங்கம் வெளியிடும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் பட்டியலில் முதியோர் இல்லங்களின் உயிர்ப்பலி சேர்க்கப்படுவதே இல்லை என்ற சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டும் இதற்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது. இதேபோல் முதியோர் இல்லங்கள் மீதும் ஏகப்பட்ட புகார்கள் கூறப்படுகின்றன.
இதுபற்றி ரோனா ஒயிட் என்ற பெண் கண்ணீர் மல்க கூறுகையில், “முதியோர் இல்லங்களில் யாருமே சரியாக கவனிப்பதில்லை. வயதானவர்கள்தானே, செத்தால் சாகட்டும் என்று நினைக்கிறார்கள். எனது 86 வயது தாயாரும் இல்லத்தின் நிர்வாகிகளின் அலட்சியத்தால்தான் உயிரை இழந்தார். இது மிகப்பெரிய கிரிமினல் குற்றம்” என்று குமுறினார்.
இதற்கிடையே, பெரும்பாலான முதியோர் இல்லங்களில் முறையான பரிசோதனை நடத்துவதற்கு முன்பாகவே ஏராளமானோர் கொரோனா தாக்கி பலியாகிவிட்டனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, முதியோர் இல்லங்களில் கொரோனா பரிசோதனையை இங்கிலாந்து அரசு தீவிரமாக முடுக்கிவிட்டு இருக்கிறது.
Leave a Reply