ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்திய பிரேசில் சுகாதாரத்துறை மந்திரியை அதிபர் போல்சனாரோ அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.
பிரேசிலியா,
கொரோனா வைரசை குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. எனவேதான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ இந்த விஷயத்தில் முரண்படுகிறார்.
அவர் ஆரம்பத்தில் இருந்தே தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தனிமைப்படுத்தல் மூலம் வைரசை கட்டுப்படுத்த முடியாது என்றும், மாறாக அது பொருளாதார பாதிப்பை மட்டுமே உருவாக்கும் என்றும் அவர் கூறிவருகிறார். பிரேசிலில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் அதிபர் போல்சனரோ இதுவரை அங்கு ஊரடங்கை அமல்படுத்தவில்லை.
இந்த நிலையில் அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிபர் போல்சனரோவின் நிலைப்பாட்டை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சுகாதாரத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டாவை அதிபர் போல்சனரோ பதவி நீக்கம் செய்தார்.
Leave a Reply