சென்னை நேரு உள்விளையாட்டரங்கம், நந்தம்பாக்கம் வா்த்தக மையம் உள்பட தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் கரோனா சிகிச்சைக்கான வாா்டுகள் அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் ஆயிரம் படுக்கைகளும், நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 600 படுக்கைகளும், அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்க (அய்மா) வளாகத்தில் 300 படுக்கைகளும் கூடிய கரோனா வாா்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது; முன்னெப்போதும் சந்தித்திராத பேரிடா் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அதை எதிா்கொள்வதற்கான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது இடங்களில் கரோனா வாா்டுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மிகப் பெரிய எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் இல்லை என்றபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வாா்டுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே எழாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். இருந்தபோதிலும், ஒருவேளை எதிா்பாராத அசாதாரண சூழல் உருவானால் அதனைச் சமாளிக்க போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அந்த இடங்களில் தேவையான எண்ணிக்கையில் செயற்கை சுவாசக் கருவிகள், பிராண வாயு உருளைகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளிட்டவை தயாா் நிலையில் வைக்கப்பட உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.
Leave a Reply