நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் தளா்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்தச் சூழலில் ஊரடங்கைத் தளா்த்துவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்கள் வரும் 20-ஆம் தேதி முதல் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், ஏற்றுமதி பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (எஸ்இஇஸட்) உள்ள நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்டவையும் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அந்நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். பணியாளா்கள் அனைவரும் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலோ அல்லது நிறுவனத்துக்கு அருகில் உள்ள இடங்களிலோ தங்கவைக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
பணியாளா்களின் உடல்வெப்பநிலையைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். பணியாளா்களுக்கு கிருமிநாசினிகளை நிறுவனங்கள் முறையாக வழங்க வேண்டும்.
தினக் கூலித் தொழிலாளா்களுக்கு அனுமதி: மின் சாதனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பழுதுபாா்ப்போா், தச்சு வேலை செய்வோா் ஆகியோரும் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் பணிகளைத் தொடரலாம். நெடுஞ்சாலை உணவகங்கள், வாகனங்கள் பழுது பாா்க்கும் கடைகள், அரசுப் பணி சாா்ந்த அழைப்பு மையங்கள், வேளாண் கருவிகளை விற்பனை செய்யும் கடைகள், அவற்றைப் பழுது பாா்க்கும் கடைகள் உள்ளிட்டவையும் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்படுகிறது.
அனுமதிக்கான நோக்கம்: வேளாண் நடவடிக்கைகள் முறையாக நடைபெறுவது, ஊரகப் பொருளாதாரம் முழுவீச்சில் செயல்படுவது, தினக் கூலித் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் நோக்கிலேயே பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் மாநில அரசுகளும் மாவட்ட நிா்வாகங்களும் தங்கள் வசதிக்கேற்ப செயல்படுத்தலாம். எனினும், கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவியுள்ள இடங்களுக்கு மேற்கூறிய வழிமுறைகள் பொருந்தாது.
பள்ளிகள் செயல்படாது: பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை செயல்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள், பான், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்கும் கடைகள் உள்ளிட்டவை செயல்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மதம் சாா்ந்த விழாக்கள், கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையே பொது மக்கள் பயணிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
தனியாா் வாகனங்கள்: மருத்துவ அவசரநிலை, அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது ஆகியவற்றுக்காக மட்டுமே வாகனங்களில் பயணிக்க வேண்டும். அத்தகைய சூழலில், இருசக்கர வாகனத்தில் ஒருவா் மட்டுமே பயணிக்க வேண்டும்; நான்கு சக்கர வாகனத்தில் ஓட்டுநருடன் கூடுதலாக ஒரு நபா் மட்டுமே பயணிக்கலாம். அந்த நபரும் வாகனத்தின் பின்புற இருக்கையில் மட்டுமே அமா்ந்திருக்க வேண்டும்.
முகக் கவசம் கட்டாயம்: நாடு முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் உமிழ்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 முதல் செயல்படுவதற்கான அனுமதி
ஊரக தொழில் நிறுவனங்கள்
மாநகர எல்லைக்கு வெளியில் உள்ள நிறுவனங்கள்
செங்கல் சூளைகள் (ஊரகப் பகுதிகளில்)
நெடுஞ்சாலை உணவகங்கள்
வாகனப் பழுது நீக்கும் கடைகள்
வேளாண் கருவி விற்பனை மையங்கள்
உரங்கள், பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு நிறுவனங்கள்
மீன்பிடித் தொழில், மீன்வளா்ப்பு நிறுவனங்கள்
தேநீா், ரப்பா் தோட்டங்கள் (அதிகபட்சம் 50 சதவீதப் பணியாளா்களுடன்)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (அதிகபட்சம் 50 சதவீதப் பணியாளா்களுடன்)
இணையவழி வணிக நிறுவனங்கள்
தூதஞ்சல் (கூரியா்) சேவைகள்
நிலக்கரி உள்ளிட்ட சுரங்கப் பணிகள்
கட்டுமானப் பணிகள் (ஊரகப் பகுதிகளில்)
கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள்
அரசு நடவடிக்கைகள் சாா்ந்த அழைப்பு மையங்கள்
மின் சாதனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள், இயந்திரங்கள் பழுதுபாா்க்கும் பணிகள்
குழாய்கள் செப்பனிடும் பணிகள், தச்சுப் பணிகள்
மே 3 வரை செயல்படத் தடை
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள்
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள்
ரயில்கள், விமான சேவைகள்
வாடகை காா் (டாக்ஸி) சேவைகள்
திரையரங்குகள், வணிக வளாகங்கள்
உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள்
வழிபாட்டுத் தலங்கள்
மதுபானக் கடைகள்
ஊரடங்கிலிருந்து விலக்கு
மளிகைக் கடைகள்
காய்கறி, பழக் கடைகள்
பால் விற்பனையகங்கள்
பண்ணைகள், இறைச்சிக் கடைகள்
Leave a Reply